பெங்களூரு: பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சியை முன்னிட்டு எலஹங்கா விமானப் படை தளத்தை சுற்றிலும் 10 கி.மீ. தொலைவுக்கு இறைச்சி, அசைவ உணவு விற்பனைக்கு பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப் படை தளத்தில் வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 14-வது ‘ஏரோ இந்தியா 2023’ விமான கண்காட்சி நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 633 நிறுவனங்களும், 40-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த 98 நிறுவனங்களும் பங்கேற்கின்றன. வெளிநாட்டுப் பயணிகள் வருகை காரணமாக எலஹங்கா விமானப் படை தளத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள ஆணையில், “ஏரோ இந்தியா விமான கண்காட்சியை முன்னிட்டு ஜன.30 முதல் பிப்.20 வரை எலஹங்கா விமானப் படை தளத்தை சுற்றிலும் 10 கி.மீ. தொலைவுக்கு கோழி, ஆடு, மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி கடைகளையும் மூட வேண்டும்.
உணவகங்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து வகையான அசைவ உணவு விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதேபோல காற்றாடி, ட்ரோன் பறக்க விடவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவதால் கழுகு போன்ற பறவைகள் வானில் வட்டமிடுகின்றன. இவை விமானங்கள் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் விமான கண்காட்சியை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
பெங்களூரு மாநகராட்சியின் இந்த உத்தரவுக்கு இறைச்சி கடைகள் கூட்டமைப்பு மற்றும் உணவக உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை மாநகராட்சி கட்டுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இறைச்சி கடைகளை மூட சொல்வதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.