வருசநாடு : தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது மூல வைகை ஆறு. இப்பகுதியில் 1984ம் ஆண்டு மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாலிப்பாறை மலைப்பகுதிக்கு இடைப்பட்ட மலைக்கிராம பகுதிகளில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அப்போதிருந்த அதிமுக ஆட்சி இத்திட்டத்திற்காக முன்னெடுப்பு பணிகள் எதுவும் எடுக்காததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வருகின்ற ஆற்று தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது. எனவே, தண்ணீரை பாதுகாப்பதற்கும் புதியதாக மூல வைகை அணை கட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த ஆட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே இப்பகுதி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்று நீர் பாசனங்கள் ஆழ்துளை கிணற்றுப் பாசனங்கள் இதுபோன்ற பாசங்களின் மூலம் மிகவும் பாதிப்படைந்து விவசாயம் செய்ததாகவும் கூறினர். இதனை தொடர்ந்து டெல்லி, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து சிறப்புக்குழு ஒன்று மூல வைகை ஆற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு பணியை மேற்கொண்டது. ஆனால், விரைவில் இந்த திட்டத்தின் மூலம் புதிய மூல வைகை அணை திட்டத்தை நிறைவேற்றி விடுவோம் என அதிகாரிகள் கூறிச் சென்றார்கள். ஆனால், அப்போதிருந்த அதிமுக ஆட்சியால் அலட்சியத்தால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தி கிடப்பில் போடப்பட்டது.
அதுபோல், கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்காலிகமாக மூல வைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகமும் குடிநீர் வழங்க திணறி வருகிறது. மேலும் உறைகிணறுகள் அனைத்தையும் தூர்வாரி முறையாக குடிநீர் வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில இடங்களில் உறை கிணறுகளை தூர்வாரிய பின்பு குடிநீர் பஞ்சம் சிறிதளவு நீங்கியது. தற்போது கடமலை மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் குடிநீர் குடிப்பதற்கும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் மூல வைகை ஆற்றுப்பகுதியை நம்பி உள்ளது. தற்பொழுது ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டரும், ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் பல இடங்களில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் மட்டும் நிரந்தர குடிநீர் பஞ்சம் நீக்க முடியும் இதற்கு தமிழக அரசும் தேனி மாவட்ட நிர்வாகமும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘வருசநாடு பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
இப்பகுதியில் மலையும், மலை சார்ந்த 150க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. மேலும் மூல வைகை ஆற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் கடந்த ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் குடிநீர் சப்ளைக்கும், விவசாயத்திற்காகவும் புதியதாக மூல வைகை அணை கட்ட வேண்டும்.’’ என்றனர்.