பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம் போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மசூதி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 28 பேர் பலியாகினர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
‘என்னை கொல்ல சதி ’ – இம்ரான் கான் கதறல்.!
அதே சமயம் மசூதி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்பிற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்கிறது,” என, குறிப்பிட்டு உள்ளார்.