ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகிறது. இதில் சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி கூடங்களில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். அதன்படி 2018 – 2021 ஊதிய ஒப்பந்தம் முடிந்து 18 மாதங்கள் கடந்த பின்னும் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வில்லை.
இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த வாரம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 75 சதவீத உயர்வுடன் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், 20 சதவீதம் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வேலைநிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வரை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.