நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே ஓவேலி சீபுரத்தைச் சேர்ந்தவர்கள் நவுசாத் மற்றும் ஜமால். சீபுரம் அம்புலி மலை பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் காவலர்களாக பணியாற்றி வரும் இவர்கள் வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டு சென்றனர்.
அப்போது, சாலையில் நின்றுகொண்டிருந்த யானை ஒன்று அவர்களை வழிமறித்து துரத்தி சென்று தாக்கியுள்ளது. இதில், நவுசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜமால் படுகாயம் அடைந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் சம்பவம் தொடர்பாக போலிசாருக்குத் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பின்னர் உடலை எடுத்து சென்று, சீபுரம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வைத்து பூட்டி விட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் அந்த பேச்சுவார்த்தைக்கு சமாதானம் ஆகவில்லை.
இதையடுத்து, நேற்று இரண்டாவது நாளாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பொதுமக்கள் யானைைய பிடிப்பதற்கு எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்க வேண்டும். அதற்கான உத்தரவை உயர் அதிகாரிகளிடம் வாங்கி எங்களிடம் காண்பிக்க வேண்டும் என்றுத் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், வனப் பகுதியில் சுற்றும் யானையை விரட்டுவதற்கு முதுமலையில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானையை காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசிடம் இருந்து உரிய உத்தரவு கிடைத்ததும் யானையை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், யானை தாக்கி உயிரிழந்த நவுசாத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்து, வனத்துறை சார்பில் ரூ.5 லட்சமும், எம்.பி. சார்பில் 1 லட்சமும், மாவட்ட நிர்வாகம் சார்பில் 1 லட்சம், தோட்ட நிர்வாகம் சார்பில் 3 லட்சம் ரூபாயும் வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டது.
இதில், உடன்பாடு ஏற்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அங்கேயே நவுசாத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த பகுதியில் சுற்றி திரியும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், அதன் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும் இரண்டு கும்கி யானைகள் சீபுரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.