மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு

புவனேஸ்வர்: மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த போலீஸ் எஸ்ஐ ஒருவர், ஒடிசா அமைச்சரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மர்மங்கள் நீடிக்கிறது. அதையடுத்து இவ்வழக்கு சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நபா கிஷோர் தாஸ் (60), நேற்று ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது, காரில் இருந்து இறங்கி விழா மேடைக்கு அமைச்சர் நபா கிஷோர் தாஸ் நடந்து சென்றபோது, சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்ஐ கோபால் தாஸ், அமைச்சரை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில், 2 குண்டுகள் மார்பில் பாய்ந்ததில் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் நிலை குலைந்து சரிந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து, ஜார்சுகுடா விமான நிலையத்தில் இருந்து வான் வழியாக புவனேஸ்வருக்கு கொண்டுச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை கொலைக்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், இவ்வழக்கை சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கொலையாளியான போலீஸ் எஸ்ஐ கோபால் தாசின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ‘அமைச்சர் நபா கிஷோர் தாஸின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் எஸ்ஐ கோபால் தாஸ், கடந்த 8 ஆண்டுகளாக மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த ஓராண்டாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த 5 மாதங்களாக அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட சென்று பார்க்கவில்லை. மேற்கண்ட விவகாரங்கள் குறித்து கோபால் தாஸின் மனைவி ஜெயந்தி தாஸ் மற்றும் மனோதத்துவ டாக்டரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது இவ்வழக்கை சிஐடி விசாரணை நடத்தி வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் கொலையின் வேறு ஏதேனும் சதி வலைகள் பின்னப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர். ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நாப் தாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி, ஒடிசா  முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைச்சர் நாப்  தாஸின் உடல் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று ஒடிசா அரசு  தெரிவித்துள்ளது. நேற்று (ஜன.29) முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு  மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது. தேசிய  கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.