மூக்கின் பக்கவாட்டில், உதட்டை சுற்றி பக்கா? Seborrheic Dermatitis பற்றி நீங்கள் அறிய வேண்டிவை!

பெரும்பாலானவர்களுக்கு மூக்கு பகுதிக்கு அருகிலும், உதட்டை சுற்றியும் கறுப்பு நிறத்தில் பக்குபோல ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் எரிச்சலையும் ஏற்படுத்தும். அதை Seborrheic Dermatitis என்பர். இதனால் பெண்கள் பாதிக்கப்படும்போது பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சிலரோ அதை குளிர்காலத்தில் முகத்தில் ஏற்படும் ஒவ்வாமை என்று கடந்து செல்வர்.

பெண்களுக்கு இந்த seborrheic dermatitis ஏற்படுவதற்கு காரணம், அவர்கள் பூப்படைந்த பின் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றம் என ஒருசில மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர், தலையில் பொடுகு அதிகமாக இருந்தால் இப்படி ஏற்படும் என்று அதற்கான மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். Seborrheic Dermatitis ஏற்பட என்ன காரணம், இந்தத் தோல் வியாதியை குணமாக்கும் வழிமுறைகள் என்ன? தோல் மருத்துவர் கத்தீஜா விளக்குகிறார்.

மருத்துவர் கத்தீஜா

“Seborrheic dermatitis என்னும் தோல் நோய் ஏற்பட காரணம், ஹார்மோனில் ஏற்படும் மாற்றம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் பூஞ்சைகள் (fungus). தலையில் ஏற்படும் பொடுகு இதற்குக் காரணம் என்று கருதுவது, ஒருவகையில் ஏற்புடையதே. ஏனென்றல் தலையில் பொடுகு ஏற்பட காரணம் கூட மலசீஸியா (malassezia) என்னும் ஒருவகை பூஞ்சை தான்.

இந்த seborrheic dermatitis என்னும் பூஞ்சை நோயை பொறுத்தவரை ஆண், பெண் என்று எல்லா பாலினத்தவர்களையும் பாரபட்சமின்றி தாக்கும். ஆண்களுக்கு மீசை, தாடியைச் சுற்றியும், காது மடல்களுக்குப் பின்பும் இது தாக்கும். பெண்களுக்கும் உதட்டுப்பகுதியை சுற்றியும், மூக்கு பகுதியின் ஓரங்களிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் புருவங்கள், கண்ணிமைகள் என இதன் தாக்கம் இருக்கும்.

இதற்கு காரணம் அந்தப் பகுதியில் அதிகமாக காணப்படும் எண்ணெய் தன்மை. இது malassezia வகை பூஞ்சைகள் அதிகமாக வளர வழிவகுக்கிறது. இதற்கு இதன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுக்க தவறும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட தோல் பகுதியின் மென்மை தன்மை குறைந்து தடித்து காணப்படுவதுடன், எரிச்சலும் அதிகமாக இருக்கும். அதோடு அந்த தோல் பகுத்து செந்நிறமாகவும் மாறும். ஒரு சிலருக்கு மூக்கின் ஓரத்தில் இது ஏற்பட்டது போன்று இருக்கும். இது எண்ணெய்த்தன்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் பரவும் தன்மை கொண்டது.

ஆயிலி சருமம்

ஒருசிலர் இந்த seborrheic dermatitis குளிர்காலத்தில் மட்டும் தான் வரும் என்று கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. பொதுவாகவே நம் சருமத்தில் பூஞ்சைகள் இருக்கும். ஆனால் அவை வளர நம் சருமத்தில் அவற்றுக்கேற்ற ஒரு எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமநிலை கிடைக்கும்போது, இன்னும் அதிகமாக வளரும்.

பூஞ்சைத்தொற்றை கட்டுக்குள் வைத்திருக்க சிகிச்சைகளும் உண்டு. உதட்டுப்பகுதியை சுற்றி ஏற்படும் அந்த எரிச்சல் உணர்வு, பக்கு இவற்றை 3 வாரங்களில் சரி செய்ய முடியும். ஆனால், தோலில் ஏற்படும் செந்நிறம் குணமாக 3 மாதங்கள் ஆகலாம். இதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி anti-fungal மருந்துகளை பயன்படுத்தலாம். தடிப்புகள் இருக்கும்பட்சத்தில் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு சிலர் Betnovate க்ரீம் பயன்படுத்துவர். அதேநேரம், அதை தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தொடர்ந்து பயன்படுத்தும்போது அது கட்டுக்குள் இருப்பது போல தோன்றும். ஆனால் அதை பயன்படுத்துவதை நிறுத்தும்போது மீண்டும் பரவும். அதன்பின் மீண்டும் அந்த க்ரீமை பயன்படுத்தும்போது இன்னும் தீவிரமாக செந்நிறமாக மாறும். இதற்குக் காரணம் அந்த க்ரீமில் இருக்கும் ஸ்டெராய்ட்ஸ் (steroids). எனவே அதை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. அதோடு ஒரு சிலர் வீட்டு வைத்தியம் என்ற பெயரில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றை பயன்படுத்துவர். இது அதன் தாக்கத்தை இன்னும் தீவிரப்படுத்தி, அந்த பூஞ்சைகள் மேலும் வளர வழிவகுக்கும்.

சருமப் பிரச்னைகள்

Water Based moisturizer-ஐ ஈரப்பதத்துக்காக பயன்படுத்தலாம். ஆனால் Oil based moisturizer-ஐ முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது. அதுபோல இதன் ஆரம்ப கட்டத்தில் plain anti-fungal மருந்துகளை பயன்படுத்தலாம். ஒருவேளை மீண்டும் அதன் தாக்கம் தீவிரமானால் மருத்துவரை அணுகுவது சிறந்தது. அதுபோல நம் சருமத்தில் இருக்கும் எண்ணெய்த் தன்மையை நீக்கும், ஸ்டெராய்ட்ஸ் இல்லாத மென்மையான சோப்புகளை பயன்படுத்தவேண்டும். சருமத்தில் பூஞ்சை தொற்றிருக்கும் பகுதியில் கடினமான சோப்பை பயன்படுத்துவது இன்னும் நிலைமையை மோசமாக்கும். லேசான ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவதும் சிறந்தது. இதற்கு இயற்கைவழியில் (natural remedies) மருத்துவம் கிடையாது என்பது கசப்பான உண்மை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.