கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சி நடத்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணம் இன்றைய தினம் நிறைவடைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தொடங்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரை கடந்த 150 நாட்களாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து இன்றைய தினம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.
சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் அக்கட்சியின் மற்ற தலைவர்களான கே.சி வேணுகோபால், ஜெயராம், ரமேஷ், திக் விஜய் சிங், மாணிக்கம் தாகூ,ர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களை தவிர காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போது தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மாநில முதல்வர்களான அசோக் கெலட், பூபேஷ் பாகல், முன்னாள் முதல்வர்களான உமன் சாண்டி, புபேந்தர் ஹூடா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்களை தவிர சிவசேனாவின் சஞ்சய் ராவத், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி, திமுகவின் கனிமொழி, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம், ராஜன் ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களும் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்குவதில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி புகார் கூறிவந்த நிலையில் சில இடங்களில் பாதுகாப்பு குளறுபடிகளும் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் யாத்திரை தொடங்கி அடுத்த நாள் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடுமையான குளிரிலும் ராகுல் காந்தி ஸ்வட்டர் அணியவில்லை. திக் விஜய் சிங்கின் புல்வாமா குறித்த பேச்சு என பல சர்ச்சைகளும் சலசலப்புகளும் இருந்துவந்த நிலையில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டபடி இன்றைய தினம் ஸ்ரீ நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து யாத்திரை முடிந்தது.
21 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி ராஜா, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட 12 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். அதே வேளையில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சில முக்கிய கட்சிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
நாட்டு மக்களிடம் அதிகரித்து வரும் வெறுப்புணர்வை அகற்றிவிட்டு, அன்பை பரப்பு நோக்கில் பாதயாத்திரை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி பரப்புரை செய்துவந்த நிலையில், இது அவர்களுக்கு தேர்தலில் கை கொடுக்குமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM