புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த ஆறு ஆண்டுகளில் மிக அதிகமாக 165 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடுங்குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களே தூக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் படைத்தவை என்பதால், தூக்கு தண்டனை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 165 குற்றவாளிளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில், 146 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அதிகமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிக அதிகமாகும். மேற்கண்ட தூக்கு தண்டனைகளில் மூன்றில் ஒரு பங்கு பாலியல் குற்றங்கள் தொடர்பானவை. கடந்த 2015 முதல் 2022ம் ஆண்டு வரை, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவிற்கு தூக்கு தண்டனைகள் அதிகரித்துள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்களின்படி, கடந்தாண்டு பிப்ரவரியில், அகமதாபாத் நீதிமன்றம் 2008ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. கடந்த 2016ம் ஆண்டில் 153 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே 2022ம் ஆண்டில் 165 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.