தண்ணீருக்காக விலங்குகள் ஒரே இடத்தில் குழுமியிருக்கும்போது தான் இந்த வேட்டை சம்பவம் அரங்கேறுகிறது. வீடியோவில் பார்ப்பதற்கு கோடை காலம் போல தெரிகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் யானை, மான் உள்ளிட்டவை எல்லாம் ஒரே இடத்தில் தண்ணீர் பருக குழுமியிருக்கின்றன. அந்த தண்ணீருக்குள் தான் முதலையும் இருந்திருக்கிறது. வேட்டைக்காக சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது, மான் குட்டிகள் தாகத்துக்காக வந்து தண்ணீர் பருக வருகின்றன. வேட்டை கிடைத்துவிட்டது என ஒரே குஷியில் இருந்த முதலை, அனைத்து தந்திர வேலைகளையும் அரங்கேற்றுகிறது.
அதாவது தண்ணீருக்குள் இருப்பதை துளியும் வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை. முதலைகளை பொறுத்தவரை தண்ணீருக்குள் இருந்தால், அவற்றின் அசைவுகள் துளிகூட மேலே தெரியாது. எந்தவொரு சமிக்கையையும் காட்டாமல் புத்திசாலித்தனமாக இரைக்காக காத்துக் கொண்டிருக்கும். அப்படி தான் இந்தமுறையும் இரைக்காக காத்திருக்கிறது. மான் குட்டி ஒன்று வந்து தண்ணீர் பருகும்போது, நொடியும் தாமதிக்காமல் வேட்டையை அரங்கேற்றுகிறது.
ஆனால் அந்த முதலைக்கு தெரியவில்லை, வல்லவனுக்கும் வல்லவன் இருப்பான் என்று. அந்த மான் குட்டியின் அதிர்ஷ்டமோ என்னவோ?.. யானை கூட்டம் ஒன்றும் அப்போது மான் கூட்டிக்கு அருகிலேயே தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. இது முதலைக்கு தெரிந்தாலும், யானை நம்மை ஒன்றும் செய்யாது என்ற அகந்தையில் குட்டி மானை வேட்டையாடுகிறது. அப்போது அந்த மான் குட்டி துள்ளிக் குதிப்பதை பார்த்த யானை, தன் ராட்ச காலால் ஒரே ஒரு மிதி முதலையை மிதிக்கிறது.
வலியால் முதலை துடிக்கும் சமயத்தில் மான் குட்டி தப்பித்து ஓடிவிடுகிறது. அந்த மானைப் பொறுத்தவரையில் தன்னுயிரை காக்க வந்த ஆபத்பாந்தவனாக யானைக்கு மனதில் நன்றி சொல்லிக் கொண்டு அங்கிருந்து ஜெட் வேகத்தில் கிளம்பியது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. யானைக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.