சேலம்: சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே பட்டியலின இளைஞர் ஒருவர், கோயிலுக்குள் புகுந்து சண்டையிட்டதாகக் கூறி, அவரை ஊர் மக்கள் முன்னிலையில் ஆபாசமாக திட்டி, தாக்க முற்பட்ட திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கத்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், திமுகவில் இருந்து மாணிக்கம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கும்பாபிஷேகம் முடிவுற்று, மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர், அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த, அந்த ஊராட்சியின் தலைவரும், திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், கோயிலுக்குள் புகுந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது தந்தையை கிராம மக்கள் முன்னிலையில் நிற்க வைத்து, கோயிலுக்குள் புகுந்து ஏன் சண்டையிட்டாய் என்று கேட்டு, ஆபாசமான வார்த்தைகளால் அந்த இளைஞரைத் திட்டும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில், திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரிடம், நீ கோயிலுக்குள் புகுந்து சண்டையிட்டதால், ஊரில் பாதிபேர் கோயிலுக்குள் வர மறுக்கின்றனர். எல்லோரும் ஒண்ணா இருக்கணும், ஊர் நல்லா இருக்கணும்னு நாங்க கஷ்டப்பட்டால், நீ பிரச்சினை பண்ணுகிறாயா? இங்கு நோன்பு போடவில்லை என்றால் வேறு எங்கும் நோன்பு போட முடியாது. கோயிலைக் கட்டுவதற்கு நீங்கள் தான் பணம் கொடுத்தீர்களா? என்றுகூறி, யார் உன்னை கோயிலுக்குள் நுழையச் சொன்னது என்று கேட்டு, அடிக்க முயற்சி செய்து, அந்த இளைஞரை தள்ளி விடுகிறார்.மேலும், வார்த்தைக்கு வார்த்தை எழுத முடியாத வகையிலான ஆபாசமான வார்த்தைகளால் இளைஞரை திட்டி மிரட்டும் மாணிக்கம், இளைஞரின் தந்தையிடம் என்ன பிள்ளை வளர்த்துள்ளாய் என்று ஆபாசமாக திட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, மாணிக்கத்தை திமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சேலம் இரும்பாலை போலீசார், ஒன்றிய செயலாளர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞரிடம் இருந்து புகாரைப் பெற்று, மாணிக்கத்தின் மீது வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கையையும் போலீஸார் மேற்கொண்டுள்ளனர். திருமலைகிரி கிராமத்தில் போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீண்டும் பிரச்சினை: கடந்த 2015-ம் ஆண்டு, இதே திருமலைகிரி கிராமத்தில் பழமையான ஸ்ரீ சைலகிரீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றின் கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. அப்போது, கோயிலில் சுவாமியை வழிபடுவது தொடர்பாக, பட்டியலின சமூகத்தினருக்கும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா நிறுத்தப்பட்டு, கோயிலைச் சுற்றியுள்ள 21 கிராமங்களிலும் மாவட்ட நிர்வாகத்தால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர், கோயில் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பாக ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணை 4 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, அனைவரும் கோயிலுக்குள் சென்று வழிபட உரிமை உண்டு என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரு சமூகத்தினரும் தனித்தனியாக கோயிலில் வழிபாடு நடத்திச் சென்றனர். இந்த நிலையில், அதே ஊரில் மீண்டும் கோயிலை மையப்படுத்தி மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அறங்காவலர் குழு: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலர் குழுவில் பட்டியல் இனத்தவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியது: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள கோயில்களுக்கு, அறங்காவலர் குழு அரசு உத்தரவின்பேரில் அமைக்கப்படுகிறது. வருமானம் ரூ.10 லட்சத்துக்கு குறைவாக உள்ள கோயில்களுக்கு, மாவட்ட அறங்காவலர் குழு அமைத்து, அவர்கள் மூலம் ஒவ்வொரு கோயிலுக்கும் நிர்வாகக் குழு அமைக்கப்படும்.
தமிழகத்தில், கடந்த ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுக்களின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், சேலம் உள்பட பல மாவட்டங்களில் இதுவரை புதிய அறங்காவலர் குழு அமைக்கப்படவில்லை. மாவட்ட அறங்காவலர் குழு அமைக்கப்படும்போது, அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பெண் ஒருவர் கட்டாயம் இடம் பெறுவர். இவ்வாறு அமைக்கப்படும் மாவட்ட அறங்காவலர் குழு மூலம் சிறு கோயில்களுக்கு நிர்வாகக் குழு அமைக்கப்படும்.
வருமானம் இல்லாத, தினசரி ஒரு கால பூஜை நடைபெறும் சில கோயில்களில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது ஒரு வீதியைச் சேர்ந்தவர்களின் பொருளாதார உதவியுடன் பூஜை மற்றும் திருவிழா ஆகியவை நடத்தப்பட்டு வரும். அதனால், அந்த கோயிலை நிர்வகிக்கும் உரிமை, அந்த சமூகத்தினர் அல்லது அந்த வீதியைச் சேர்ந்தவர்களிடம் இருக்கும். எனினும், கோயில் நிர்வாகத்தை மட்டுமே அவர்கள் மேற்கொள்ள முடியும். வழிபாடு என்பது அனைவருக்கும் பொதுவானது. வழிபட வருபவர்களை தடுப்பது குற்றம். அவ்வாறு தடுப்பவர்களிடம் இருந்து கோயில் நிர்வாக உரிமை பறிக்கப்படும் என்றனர்.