தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும் கொடூர விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 26 வயதான இவருக்குச் சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த ஷோபனா என்பவருடன் சமீபத்தில் திருமணம் ஆகி உள்ளது.புதுமண தம்பதிகளான இவர்கள், சோபனாவின் தாயார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாமியார் வீட்டுக்குச் சென்ற மணிகண்டன். அங்கே விருந்து சாப்பிட்டுவிட்டு பைக்கில் மீண்டும் மனைவி சோபனாவுடன் வீடு திரும்பி உள்ளார்.
திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. அதில் மணிகண்டனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மணிகண்டனின் உடல் கூராய்வு செய்யப்பட்டதில் அவர் மது போதையிலிருந்தது தெரியவந்துள்ளது. புதிதாக திருமணமாகி உடனே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.