அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ-வுமான தளவாய் சுந்தரம் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரட்டை இலை சின்னம் விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் எடப்பாடி அணி போட்டியிடுவது உறுதி என்பது நாடறிந்த உண்மை. அதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது. ஓ.பி.எஸ்-ஐ பொறுத்தவரை அவர் இந்தக் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுவிட்டார். அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவராக ஏதாவது பேசிக் கொண்டு வருகிறார். ஏற்கெனவே சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஆட்சி வரக்கூடாது என்று எதிர்த்து வாக்களித்தார். அதற்கு அடுத்தாற்போல் இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர் அவர். எனவே, இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவது நாடறிந்த உண்மை.
இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வேலையைத்தானே பன்னீர்செல்வம் செய்துகொண்டிருக்கிறார். எதை எடுத்தாலும் பா.ஜ.க-வை வம்புக்கு இழுக்கிறார். `அவர்களுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன்’ என்கிறார். பா.ஜ.க எங்கள் உட்கட்சி விவகாரத்தைப் பற்றி பேசவே இல்லையே. ஓ.பி.எஸ்-தான் அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியவர். தர்ம யுத்தத்தை ஆரம்பித்தவர், சுயநலவாதி. அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளுக்கு பா.ஜ.க காரணமல்ல.
ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு கட்சித் தலைவர்களாகச் சந்தித்து ஆதரவு கேட்பது முறை. அந்த வகையில் எதிர்க்கட்சிகள் இ.பி.எஸ் அணிக்கு ஆதரவு கொடுத்தாலும் மகிழ்ச்சி, கொடுக்காவிட்டாலும் மகிழ்ச்சி. நாடாளுமன்றம் கூடுவது தொடர்பாக அ.தி.மு.க சார்பில் ரவீந்திரநாத்தை அழைத்திருக்கிறார்கள். அவர் ஒருவர்தான் எம்.பி-யாக இருக்கிறார், அவரை நாங்கள் கட்சியிலிருந்து ஏற்கெனவே நீக்கி விட்டோம். அவர் ஒருவர் மட்டும் இருப்பதால் அவரை அழைத்திருக்கிறார்கள். பா.ம.க-வைப் பொறுத்தவரை யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் வந்தாலும் மகிழ்ச்சி, வராவிட்டாலும் மகிழ்ச்சிதான்” என்றார்.