இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் மொழியியல் சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக வரும் ஆறாம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்களிக்கக்கோரி மொழி சிறுபான்மையினர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டிருந்த இந்த அறிவிப்பு ஆணையை ரத்துசெய்ய கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மொழியியல் சிறுபான்மையினராக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடிய சூழலில் அரசின் இந்த முடிவினால் அவர்களது கல்வி பாதிக்கப்படும் என வாதிட்டார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேறு மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்கள் ஏன் மொழி சிறுபான்மையினராக இருக்கக்கூடியவர்களுக்கு விலக்களிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தை நாங்கள் விரிவாக விசாரிக்கிறோம் எனவும் கூறினர். இந்த வழக்கை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், 2023 ஆம் ஆண்டும் மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவை கூற வேண்டும் எனவும் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM