இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.
கோவை திருமலையாம்பாளையத்தை அடுத்த குட்டிகவுண்டன்பதியில் உள்ள தனியார் பள்ளியின் முதலாம் ஆண்டு விழாவை ஒட்டி ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடையே பேசினார். அப்போது பேசியவர், ”இந்தியாவில் சில மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது; சில மாநிலங்கள் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. நாட்டில் வளர்ச்சிபெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தாலும், திரிபுராவில் இருந்தாலும் சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் ஆகியவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தற்போதைய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
உதாரணமாக, அனைத்து ஏழைகளுக்கும் ரூபாய்.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு கிடைக்கும் திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டம். இந்திய வரலாற்றில் முதல்முறையாக தற்போது ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் 3.15 கோடி பெண் வாக்காளர்களும், 3.04 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீரிய நடவடிக்கைகள்தான் இதற்கு காரணம்.
ராணுவம் உட்பட அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. போர் விமானங்களை தற்போது பெண்கள் இயக்குகின்றனர். நமது நாட்டின் தொன்மையான கலாசாரம், ஆன்மிகக் கூறுகளை நினைத்து நாம் பெருமைகொள்ள வேண்டும். தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட உலகில் வேறு எங்கும் இதுபோன்று இல்லை” என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM