பெஷாவர்: பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு நிறைந்த போலீஸ் வளாகத்தில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில், 48 பேர் கொல்லப்பட்டனர்; ௧57 பேர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மதியம் தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தனர்.
போலீஸ் எஸ்.பி., அலுவலகம், போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ள இந்தப் பகுதி, பலத்த பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் அமைந்துள்ள இந்த மசூதியில், நேற்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அவசர நிலை
தொழுகையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், 48 பேர் உயிரிழந்தனர்; ௧57 பேர் படுகாயமடைந்தனர். இதில் பலர் அபாய கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரில் பெரும்பாலானோர் போலீஸ், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என, தெரிகிறது.
இந்த தாக்குதலில், பெஷாவர் போலீஸ்எஸ்.பி., ஷஜாத் கவுகாப், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொழுகையில் ஈடுபட்டு அவர் வெளியேறியபோது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மருத்துவமனையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
காயமடைந்தவர்களுக்குத் தேவையான ரத்தத்தை தானம் செய்யும்படி மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு, இதுவரையிலும் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அதே நேரத்தில், ‘தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான்’ என்ற அமைப்பு, பாதுகாப்புப் படையினரை குறி வைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தியுள்ளது. எனவே, இந்த அமைப்பினர் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த தாக்குதலில், மசூதியின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. இதன் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.
கடந்தாண்டு, பெஷாவரின் கோச்சா ரிசல்தார் பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் மசூதியில் இதேபோன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ௬௩ பேர் உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்