மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு எதிராக, இங்கு வசிக்கும் காலிஸ்தான் சீக்கிய ஆதரவாளர்கள் சமீப காலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹிந்து கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதுடன், கோவில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகத்தையும் எழுதி வருகின்றனர்.
இதற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. துாதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
அமெரிக்காவை மையமாக வைத்து, ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு, பஞ்சாபை, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த அமைப்பின் துாண்டுதல் மற்றும் நிதி உதவியுடன் தான், ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களை ஆஸ்திரேலிய அரசு தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மெல்போர்ன் நகரில் உள்ள ‘பெடரல் ஸ்கொயர்’ என்ற இடத்தில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் நேற்று, பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக் கோருவதற்காக பொது ஓட்டெடுப்பை நடத்தினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான இந்தியர்கள் தேசியக்கொடியுடன், அங்கு போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக வந்தனர். இவர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் விரட்டி அடித்ததுடன், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலரை கைது செய்தனர். இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துாதரகமும், ஹிந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவில் 2.10 லட்சம் சீக்கியர்களும், 6.84 லட்சம் ஹிந்துக்களும் வசிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்