கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மேல கலங்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மாந்திரீக பூஜைகள் செய்து வரும் இவரிடம் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மணிகண்டன் தொழிலாளியிடம் உங்களது வீட்டில் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக, அவர் அடிக்கடி தொழிலாளியின் வீட்டிற்கு சென்று வந்தபோது, அங்கு மணிகண்டன் தொழிலாளியின் பதின்மூன்று வயது மகளுடன் நெருங்கி பழகியுள்ளார்.
இந்நிலையில், மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். அதன்படி, மாணவியும் இதனை வெளியே சொல்லாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து, அந்த சிறுமி திடீரென வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். உடனே அவர்கள் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் தொடர்பாக மாணவியிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது சிறுமி வீட்டிற்கு மாந்திரீக பூஜை செய்ய வந்த மணிகண்டன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.