தண்டராம்பட்டு: அரசு துறைகளின் அதிரடி நடவடிக்கையால் தண்டராம்பட்டு அருகே தென்முடியனூர் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வழிபட அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் 80 ஆண்டுகளுக்கு பிறகு கலெக்டர் தலைமையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென் முடியனூர் ஊராட்சியில் 13 சமூகங்களை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் 13 நாட்கள் திருவிழா நடைபெறும். கடந்த 80 ஆண்டுகளாக இந்த கோயிலில் வழிபாடு நடத்த தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அவர்கள் அறநிலையத்துறையினரிடம் தங்களை கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தனர். இதனால் கடந்த 24ம் தேதி திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே சமாதான கூட்டம் நடைபெற்றது.
அப்போது, 30ம் தேதி முத்துமாரியம்மன் கோயிலை திறந்து பொங்கல் வைத்து வழிபட அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர் கோயிலை திறந்து வழிபடக்கூடாது. அவர்களுக்காக எங்களுடைய சொந்த நிலத்தை ஒதுக்கி அவர்கள் வழிபடுவதற்காக தனியாக கோயில் கட்டுவதற்கு பண உதவியும் நாங்கள் செய்து கொடுத்தோம். அவர்களுக்காக தனியாக கோயில் உள்ளது. அங்கு சென்று வழிபடுங்கள் என்று கூறினர். மேலும், நேற்று கோயிலை சாத்திவிட்டு வெளியே அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கலெக்டர் பா.முருகேஷ், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, எஸ்பி கார்த்திகேயன், ஆர்டிஓ மந்தாகினி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், தாசில்தார் பரிமளா ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பினரிடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் கோயில் திறக்கப்பட்டு தலித் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.