புதுடெல்லி: மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். இந்த உரைக்குப் பிறகு, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். பாஜக தலைமையிலான அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் என்பதால், நடுத்தரப் பிரிவு மக்களை கவர்வதற்கான திட்டங்கள் இதில் இடம்பெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூ.2.5 லட்சம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டின்போது நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதில் மாற்றம் செய்யப்படாத நிலையில், உச்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.