கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள கடைகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பாதுகாப்பு அற்ற முறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி, ஆனைமலை போலீசார் வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கடையில் சரவெடி உள்பட பல்வேறு வகை பட்டாசுகளை 61 பெட்டிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாசை பதுக்கி வைத்து விற்பனை செய்த உதயகுமார் என்பவரை கைது செய்தனர். அதன் பின்னர் அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.57,100 மதிப்புள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பேன்சி கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், 64 பெட்டிகளில் ரூ.26,620 மதிப்புள்ள பட்டாசுகளை கைப்பற்றினர். மேலும், பட்டாசு விற்பனை செய்த பேன்சி கடைகாரர் அண்ணாமலை என்பவரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, காரமடையில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 55 பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ஊட்டி ரோட்டில் உள்ள மளிகை கடை ஒன்றில் போலீசார் சோதனை செய்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 75 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரமடையை சேர்ந்த குமரேசன் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவநாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று, ஒரே நாளில் கோவையில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 720 மதிப்புள்ள 255 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.