இரட்டை இலைக்கான சண்டை பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்றைய தினம் (ஜனவரி 31) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அடுத்த ஒருவாரத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து 10ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விடும். அதன்பிறகு வேட்பாளருக்கான பிரச்சாரத்தில் சின்னத்தை வைத்து தான் மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும். எனவே அதிமுகவிற்கு இரட்டை இலை மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சிக்கலில் எடப்பாடி
அதுவும் குறுகிய காலகட்டத்தில் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயமும் எழுந்திருக்கிறது. ஏனெனில்
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
ஆகிய இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்து நிற்கும் சூழலில் எடப்பாடியின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அவரது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க மறுக்கிறது. இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, விரைவாக ஒரு தீர்வை சொல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மூன்று நாட்கள் கெடு
முன்னதாக அதிமுக பொதுக்குழு வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே எடப்பாடி தாக்கல் செய்த இடைக்கால மனு மீது மட்டுமே விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. இந்த விஷயத்தில் தீர்வு காணும் வகையில் அடுத்த மூன்று நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், தேர்தல் ஆணையமும் உரிய பதிலை அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெருக்கடியில் தேர்தல் ஆணையம்
அதுவும், தயவு செய்து காலம் தாழ்த்தி விடாதீர்கள் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கோரிக்கையும் வைத்திருக்கிறது. இந்த விஷயத்தில் நீண்ட ஆலோசனை தேவைப்படுகிறது. பல்வேறு சட்ட நுணுக்கங்கள், முந்தைய அரசியல் கள முடிவுகள் உள்ளிட்டவற்றை ஆராய வேண்டியுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கெடு மிகவும் குறைந்த நாட்களே ஆகும்.
அதிமுகவில் அதிகார மோதல்
இதன் காரணமாக தேர்தல் ஆணையம் என்ன பதில் அளிக்கப் போகிறது? அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகள் இன்னும் இருக்கின்றன என்ற நிலைப்பாட்டில் மாற்றம் வருமா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இவ்வாறு கையெழுத்து, வேட்பாளர் பட்டியல், இரட்டை இலை சின்னம் என அதிமுகவின் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் தீர்ப்பு எப்படி கிடைத்தாலும் அதை தங்களுக்கு சாதகமாக மாற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எடப்பாடிக்கு பிளஸ் பாயிண்ட்
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு ஓபிஎஸ் தரப்பு தான் காரணம். திமுகவின் ‘பி’ டீமாக செயல்பட்டு கொண்டு கட்சியின் நலனுக்கு விரோதமாக சின்னத்தை முடக்கி விட்டனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கலாம். பிரச்சார களத்தில் மக்கள் மத்தியிலும், அதிமுகவினர் மத்தியிலும் பெரிதாக கொண்டு சேர்க்கலாம்.டெல்லியும் கூட தங்களுக்கு பாதகமாக நடந்து கொண்டார்கள் என நாசுக்காக கூறி பிரச்சார களத்தை முன்னெடுத்து செல்ல முடியும்.ஒருவேளை இரட்டை சிலை கிடைத்துவிட்டால் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதையும் நிரூபித்து காட்டி விடலாம் என்ற கணக்கும் போட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினரும் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடியும் வரை அதிமுகவில் அதிரடிகளுக்கு பஞ்சமிருக்காது.