புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னம் கோரி இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தவழக்கில் இறுதி முடிவு எட்டும்வரை அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த கூடாது என இடைக்கால தடை விதித்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் தொடர்ந்து நடந்து வந்தது. இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை எடுத்துரைத்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்குசட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.27-ம் தேதி நடக்க உள்ளது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார் என இபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பும் அறிவித்துள்ளதால், ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.
இதை கருத்தில்கொண்டு, இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி முறையீடு செய்தார். ‘‘அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இபிஎஸ்ஸை இன்னும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்பதால் அதுதொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மற்றும் ‘இரட்டை இலை’ சின்னத்தை அங்கீகரித்து, வேட்புமனுவில் போடப்படும் இபிஎஸ்ஸின் கையெழுத்தை ஏற்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று அவர் கோரினார்.
மீண்டும் முறையீடு: இதுதொடர்பாக ஜன.30-ம்தேதி (நேற்று) மீண்டும் முறையீடு செய்யுமாறு நீதிபதிகள் கடந்த வாரம் அறிவுறுத்திய நிலையில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி நேற்று ஆஜராகி மீண்டும் முறையீடு செய்தார்.
‘‘ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இபிஎஸ்ஸின் கையெழுத்தை ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தை ஏற்க உத்தரவிட வேண்டும். மேலும், இதுதொடர்பாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த முறையீட்டை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, ‘‘இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையமும், ஓபிஎஸ் தரப்பும் 3 நாட்களுக்குள் பதில்தர வேண்டும்’’ என உத்தரவிட்டு,விசாரணையை பிப்.3-ம் தேதிக்குதள்ளிவைத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை மனதில் கொண்டு இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையமும், ஓபிஎஸ் தரப்பும் பதில் அளிப்பதற்கு தாமதம் செய்ய கூடாது என அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், இதை தாண்டி வேறுஎந்தவொரு விவகாரமும் பரிசீலிக்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.