பீஜிங்,
சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
சின்ஜியாங்கில் உள்ள விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த பயணிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் பயந்து அங்கிருந்து வெளியே ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, காயமோ அல்லது பெரிய அளவில் பொருள் சோதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
கடந்த 2008-ம் ஆண்டு சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை 7.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதும் இதில் சுமார் 90,000 பேர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.