மதுரை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் வழிவிட்டான். இவரது மகள் மீனாட்சி (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மீனாட்சிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்பதால், பெற்றோர் அவரை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த மீனாட்சி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து மீனாட்சியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.