பாட்னா: பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அதைக்காட்டிலும் இறந்து போவது மேலானது என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
பிரதமர் மோடியின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்கள்தான் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது பொய் வழக்குகளை தொடுத்து வருகின்றனர். இனி பாஜகவுடன் கூட்டணி என்பதைக் காட்டிலும் அதை விட உயிர்துறப்பது எவ்வளவோ மேலானது.
நாடாளுமன்றத் தேர்தலில் பிஹாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றிபெறுவோம் என பாஜக தலைவர்கள் கூறுவது முற்றிலும் கேலிக்கூத்தானது.
இவ்வாறு முதல்வர் நிதிஷ் தெரிவித்தார்.
செல்வாக்கு இல்லாத பிஹார்முதல்வருடன் கூட்டணி வைப்பதால் எந்தப் பலனும் இல்லை என்றும், அதற்கான கேள்வியே எழவில்லை என்றும் பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்திருந்த நிலையில் நிதிஷ் குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.