சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டையைப் பொறுத்தவரை, 3 வகையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டள்ளன. அதாவது, க்யூஆர் கோடு, ஹோலோகிராம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. போலி அட்டையை உருவாக்க முடியாதபடி, அதில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவறுத்தியிருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில், புதிதாக வாக்காளர் அட்டைக்கும், மாற்றங்களுக்காகவும் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்ற. முதல்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்தார்.