டெபிட் கார்டு இல்லாமல் ஆதார் ஓடிபி மூலம் யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் முன்னதாக யுபிஐ செயலியில் ஆக்டிவேட் செய்ய டெபிட் கார்டுடன், அதற்குரிய செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணும் தேவை. இது டெபிட் கார்டு கையில் வைத்திருக்காத பல வாடிக்கையாளருக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த தடையாக இருந்தது.
இந்நிலையில், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அனைவருக்கும் சேர்க்கும் வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ‘உங்களுக்கு தெரியுமா? யுபிஐ பதிவு செய்வதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. யுபிஐ அலையில் இணைய ஆதார் கார்டு ஸ்கேன் செய்தால் போதுமானது’ எனத் தெரிவித்துள்ளது.
ஆதார் ஓடிபி மூலம் யுபிஐ ரகசிய எண் அமைக்க, அல்லது மாற்றியமைப்பதற்கு சிறந்த மற்றும் எளிதான வழியாகும். மேலும், டெபிட் கார்டு இல்லாத மற்றும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பயன்பெற விரும்பும் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
யுபிஐ செயலியில் ரகசிய எண்ணை மாற்றுவது எப்படி?
1- யுபிஐ செயலியில் புதிய ரகசிய எண் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
2- ஆதார் அடிப்படையிலான சரிப்பார்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.
3- ஆதார் அட்டையின் கடைசி 6 எண்களை பதிவு செய்ய வேண்டும்.
4- செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை பதிவிடுங்கள்.
5- சரிபார்த்த பின், புதிய ரகசிய எண்ணை பதிவிட்டு, உறுதி செய்யுங்கள்.
இதற்கு செல்போன் எண், ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்குடன் இணைத்திருப்பது அவசியம். வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணும், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும்.