புதுடெல்லி: அபுதாபியில் இருந்து மும்பை நோக்கிவந்த விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான UK 256 விமானத்தில் பெண் ஒருவர் தகராறு செய்து அரை நிர்வாணக் கோலத்தில் அலைந்த சம்பவம் நடந்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்ற அந்தப் பெண் விமானத்தில் எகானமி பிரிவில் பயணம் செய்ய டிக்கெட் பெற்றிருந்தார். ஆனால் அவர் திடீரென பிசினஸ் வகுப்பில் இருக்கை கோரி தகராறு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் ஆடைகள் சிலவற்றை கலைந்து அரை நிர்வாணக் கோணத்தில் அங்குமிங்கும் அலைந்து அனைவருக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டதாக விஸ்தாரா விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “விஸ்தாரா விமான நிறுவனம் தனது பயணிகளின் பாதுகாப்பு, மாண்புக்கு எந்தவிதமான இடையூறு ஏற்படுவதையும் பொறுத்துக் கொள்ளாது. அதேபோல் ஊழியர்களின் பாதுகாப்பையும், மாண்பையும் உறுதி செய்யத் தவறாது. அதனால் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே பைலட் உடனடியாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் கொடுத்துவிட்டார். விமானம் தரையிறங்கியதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் பரிந்துரைத்துவிட்டார். இது தொடர்பாக எங்கள் நிறுவனம் முறையாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது” என்றார்.
மும்பை விமான நிலைய போலீஸாரும் விஸ்தாரா விமானம் யுகே 256 தரையிறங்கியதும் அதன் பணிக் குழு சம்பந்தப்பட்ட பெண் பயணி மீது புகார் அளித்தது என்று தெரிவித்தனர். மேலும், விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விஸ்தாரா விமான நிறுவனம் நடந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்துவிட்டதாக உறுதிப் படுத்தியுள்ளது.
முன்னதாக, நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் பயணியின் மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பொது வெளியில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.இதையடுத்து, ஏர் இந்தியாவுக்குஅபராதம் விதிக்கப்பட்டதுடன், விமானியின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது. சம்பவத்தில் அலட்சியம் காட்டியதாகவே ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.