சென்னை: கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக சில மாவட்டங்களில் போலீஸார் சம்பந்தப்பட்ட எஸ்.பி.க்களின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவும், இதனால் பிரச்சினை பெரிதாகி, சட்டம்-ஒழுங்கில் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய எஸ்.பி.க்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம். அது தேவையும் இல்லை. பதற்றமான, நியாயமான மற்றும் முக்கிய விவகாரம் தொடர்பாக, தேவைக்குத் தகுந்தவாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரே வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன சோதனை: இதேபோல, டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலையாட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்களை, வாகன தணிக்கையின்போது போலீஸார் பறிமுதல் செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடுவதாகவும், அதனால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு விவசாய அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.
அதேபோல, வாகனத் தணிக்கையின்போது டிராக்டர்களில் விவசாயப் பணிகளுக்காகச் செல்லும் விவசாயத் தொழிலாளர்கள் காத்திருக்க வைக்கப்படுவதாகவும், இதனால் விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸாருக்கு இது தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்கி, விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.