தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். முதல்வரின் வருகையொட்டி திமுக கட்சியினரும் அரசு அதிகாரிகளும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்த சிவசக்தி சேனா அமைப்பின் நிறுவனர் ராஜகோபால் என்பவர் முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிவசக்தி சேனா நிறுவனர் ராஜகோபாலை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேலூர் மாவட்டம் வரவுள்ள நிலையில் இந்து அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.