சென்னை புழல் அருகே, கணவனை விட்டுப் பிரிந்த இளம்பெண் முன்னிலையில், அவரது காதலன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையை அடுத்த புழல் அருகே லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசித்து வந்த சுதா சந்தர் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணுடன் விநாயகபுரம் கல்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுதா சந்தரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பி சென்றது. ரத்தவெள்ளத்தில் மிதந்த சுதாசந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சென்ற புழல் போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிளில் உடன் வந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ராகவி என்ற அந்தப் பெண் ஆவடி வெள்ளாச்சேரியைச் சேர்ந்தவர் என்பதும் ஏற்கனவே வசந்த் என்பவரோடு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளதும் தெரிய வந்தது. சுதா சந்தரை கொலை செய்தவர்கள் ராகவியின் சகோதரர் பரத் மற்றும் அவரது குடும்பத்தார் என்பதும் தெரிய வந்தது.
சுதாசந்தரும், ராகவியும் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே காதலித்த நிலையில், 2 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். ராகவியை அழைத்து வந்த பெற்றோர் உறவினரான வசந்த்திற்கு திருமணம் செய்துவைத்து, இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது
இந்நிலையில், சுதா சந்தருடன் மீண்டும் நட்பு ஏற்பட்டதால், நகை மற்றும் பணத்தோடு வீட்டை விட்டு வெளியேறி காதலனோடு சென்றுள்ளார். போலீசில் புகார் அளித்து இருவரையும் பிரித்த நிலையிலும் மீண்டும் சுதா சந்தருடன் வசித்து வந்துள்ளார் ராகவி.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரின் சகோதரர் பரத் மற்றும் அவரது உறவினர் உதயா உள்ளிட்ட குடும்பத்தார் சுதா சந்தரைக் கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள சகோதரர் பரத் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ராகவியின் கணவர் வசந்தின் நண்பர் கார்த்திக் என்பவரை கைது செய்த போலீசார் அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர்.