ஐசிசியின் 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 தொடர் இந்த மாதம் 14 ம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி எதிரணிகளை துவம்சம் செய்து உலகக்கோப்பையைத் தட்டித் தூக்கியிருக்கிறது.
இந்திய அணி இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தது. இதுவே இந்த உலக கோப்பையில் இந்திய அணி எதிர்கொண்ட அதிகபட்ச இலக்காகும். இந்த இலக்கை 16.3 ஓவர்களிலேயே சேஸ் செய்து தென்னாப்பிரிக்கா அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ஸ்வேதா செஹ்ராவத், 95 ரன்கள் (20 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அணியின் கேப்டன் ஷஃபாலி வர்மா 45 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே அதிரடியான வெற்றியைப் பதிவு செய்தது, இந்திய அணி.
அடுத்ததாக இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி, யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்வேதா செஹ்ராவத் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகிய இருவரும் இணைந்து கடந்த ஆட்டத்தைப் போலவே அதிரடியாக விளையாடினர். ஸ்வேதா செஹ்ராவத் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷஃபாலி வர்மா 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சைக் கடைசிவரை சமாளிக்க முடியாமல் திணறினர். முடிவில் 20 ஓவர்களில் 97 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணி.
அடுத்த போட்டியில் இந்திய அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 149 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியை வெறும் 13.1 ஓவர்களில் 66 ரன்களுடன் சுருட்டியது, இந்திய அணி. அடுத்தடுத்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மேலிடத்தில் இருந்தது, இந்திய அணி. இந்திய அணியின் பந்து வீச்சையும் பேட்டிங்கையும் சமாளிக்க முடியாமல் எதிரணிகள் திணறி வந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை சரணடைய வைத்தது.
நான்காவது போட்டியான சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 18.5 ஓவர்களில் 87 ரன்கள் மட்டுமே எடுத்து, மொத்த விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆல் அவுட் ஆனது. எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, நிதானமாக விளையாடி 13.5 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளை பெற்று வந்த இந்திய அணிக்கு, இத்தோல்வி ஒரு வேகத்தடையாக அமைந்தது. ஆனாலும், அடுத்த ஆட்டத்திலேயே உலகக் கோப்பை வெற்றி பயணம் மீண்டும் சூடு பிடித்தது.
அடுத்த சூப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை அணியை எதிர்கொண்டது, இந்திய அணி. ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தாலும், வெறி கொண்ட வேங்கையாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள், இலங்கை அணியைப் புரட்டி எடுத்தனர். 20 ஓவர்களில் இலங்கை அணியால் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 59 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை அணி 20 ஓவர்களில் எடுத்த 59 ரன்களை, வெறும் 7.2 ஓவர்களில் எடுத்து இந்திய அணி ஆட்டத்தை முடித்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது, இந்திய பெண்கள் அணி. இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு நெருங்கி வந்தது.
இந்திய பெண்கள் அணியின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே மீதம் இருந்தது. இறுதிப்போட்டியில் சரி நிகர் பலம் கொண்ட இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள பலப்பரிட்சை செய்தது, இந்திய அணி. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் இந்த சாமர்த்தியமான தேர்வு, கச்சிதமாகப் பொருந்தியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்து 17.1ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. இதற்குப் பின்னர் உலகக் கோப்பையை வெல்லப்போவது இந்திய அணிதான் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 14 வது ஓவரின் முடிவில் 69 ரன்கள் எடுத்து உலக கோப்பையை முதன்முறையாகத் தட்டித் தூக்கியது.
இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுக்க இந்திய அணி பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டது. இந்த உலகக் கோப்பை வெற்றிக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் நூஷின் அல் காதீர், மிக முக்கிய காரணமாவார்.
இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு பெண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். இந்த 2005 உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. அன்று இந்திய அணியின் வீரராக இவருடைய உலகக்கோப்பை கனவு நிறைவேறாவிட்டாலும், இன்று ஒரு பயிற்சியாளராக இவரின் உலக கோப்பை கனவு நிறைவேறியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்வேதா செஹ்ராவத், இந்த 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை வெற்றியில் பெரும் பங்காற்றினார். இந்த தொடர் 7 இன்னிங்சில் விளையாடிய இவர், மொத்தமாக 297 ரன்கள் குவித்து இந்த டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.