அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆய்வறிக்கையால், அதானி குழுமம் ஆட்டம் காணும் நிலையில், உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கௌதம் அதானி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதன்மையான தொழில் குழுமமான அதானி குழுமம், சுரங்கங்கள், மின் உற்பத்தி, கட்டுமானத் துறை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் கட்டுமானம், எரிவாயு, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து வந்தது. இதனால் இந்தியாவின் முதல் பெரும் பணக்காரராக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி முன்னேறியிருந்ததுடன், அவரின் சொத்து மதிப்பு கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அது மட்டுமில்லாமல், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் வரையில் அவர் முன்னேறியிருந்தார்.
இந்த நிலையில், அதானி குழுமம் பற்றி ஆய்வு நடத்திய அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த 24-ம் தேதி அன்று அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல மோசடிகளில் பல ஆண்டுகளாக அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்தது. அந்த அறிக்கையில் 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இது அதானி குழுமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மறுத்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டதுடன், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் அறிவித்தது. அதற்கு பதிலளித்து ஹிண்டன்பர்க் மறு அறிக்கை வெளியிட்டது. மேலும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் எனவும், தங்களுடைய 88 கேள்விகளில் அதானி குழுமம் 66 கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்தது. மேலும், மோசடிகளை மறைக்க தேசியவாதத்திற்குள் ஒளிந்து கொள்ள வேண்டாம் என்றும் நேரடியாகவே கூறியது.
இதையடுத்து, அதானி குழும பங்குகள் மோசமான சரிவை பதிவு செய்துவரும் நிலையில் திங்கட்கிழமை வரையிலான 3 நாள் வர்த்தகத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு 5.57 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது. மேலும், ஹிண்டன்பர்க் அமைப்பின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மூலம் ப்ளூம்பர்க் பட்டியலின்படி, பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கௌதம் அதானி. இவருக்கு அடுத்த இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM