பழனி முருகன் கோவில் கருவறையை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தினால் பக்தர்கள் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது தை பூச திருவிழா தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இந்நிலையில் பழனி கோவில் கருவறையை பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து‌ தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் பழனி முருகன் கோவில் கருவறையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையும் தெரிகிறது. இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பழனி கோவில் கருவறையை செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என்று விதி இருந்தும் சில பக்தர்கள் விதிகளைமீறி திருக்கோவில் கருவறையை படம் பிடித்துள்ளனர். 

ஏற்கனவே கும்பாபிஷேகத்தின்‌ போது ஆகமவிதிகள் மீறப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி பக்தர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போது கருவறையில் உள்ள முருகன் சிலையை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியிருப்பது, பக்தர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்ல உயர்ந்திமன்றம் தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் உடனடியாக திருக்கோவில்‌ நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்‌ கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக, பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை செய்த போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சுவாமிகளின் கருவழி வந்த வாரிசுகளான, தற்போதைய ஆதினமான புலிப்பாணி பாத்திர சுவாமிகளின் பெயரை அழைப்பிதழில் போடாமல் அவமரியாதை செய்த திருக்கோவில் நிர்வாகத்தை கண்டித்து, பழனி மலை கோவிலுக்கு உரிமை பெற்ற புலிப்பாணி ஆதீனம், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆதீனம் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.