புதுடெல்லி: ஒப்பிட முடியாத வேகத்தில் மத்திய அரசு இயங்கி வருகிறது என்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்கியது. இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு: கடந்த 9 ஆண்டுகளாக நிலையான அரசு மத்தியில் உள்ளது. இந்த 9 ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு ஆக்கப்பூர்வ மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை நாட்டு மக்கள் பார்த்துள்ளார்கள். நாட்டின் மேம்பாட்டுக்காக எனது அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
எதிர்பாராத வேகத்தில், அளவில் செயல்படக்கூடிய அரசை தற்போது இந்தியா பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை நிலையான அரசை தேர்ந்தெடுத்ததற்காக நாட்டு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மத்திய அரசின் 300 திட்டங்களின் பொருளாதார பயன்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் மிக முக்கிய நடவடிக்கை.
நாட்டில் 3.5 கோடிக்கும் அதிமான வீடுகளை மத்திய அரசு கட்டி ஏழை பயனாளிகளுக்கு வழங்கி உள்ளது. 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உணவுப் பொருட்களை எனது அரசு ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. 11 கோடி ஏழை விவசாயிகளுக்கு 2.25 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி பயிலவும், வேலைவாய்ப்பை பெறவும் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குவதற்கான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்துள்ளது. ராணுவ பயிற்சிப் பள்ளிகளிலும் பெண்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பெண்களுக்கான குழந்தைப் பேறுகால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருபுறம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் நவீன நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட வந்தே பாரதம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் ராஜ பாதையாக இருந்தது தற்போது கடமை பாதையாக மாறி உள்ளது. கடமைப் பாதையில் நிறுவப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை, ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கிறது. நேதாஜிக்கு அந்தமான் நிகோபாரில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருதினை பெற்ற 21 ராணுவ வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
செமி கண்டக்டர்களையும் விமானங்களையும் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தொடர் முயற்சி காரணமாக ராணுவ ஏற்றுமதி 6 மடங்கு உயர்ந்துள்ளது. முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட போர் விமானமான விக்ராந்த் நமது ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நமது விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த், ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் முத்திரை பதித்திருக்கிறார்கள்.
நாடு தற்போது சந்தித்து வரும் வளர்ச்சி எதிர்பார்த்திராதது, ஒப்பிட முடியாதது. தற்போது நாடு முழுவதும் ஏழை மக்களுக்காக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 11 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. வெறும் 2 ஆண்டுகளில் நாட்டில் 220 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 8 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் 55 சதவீதம் அதிகரித்துள்ளன. 2014ல் நாட்டில் இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 74. இது தற்போது 147 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் சூரிய மின் உற்பத்தி 20 மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது ஜி20 கூட்டமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலம் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உலக நாடுகளுடன் நமது உறவு முன் எப்போதும் இல்லாத அளவு மேம்பட்டுள்ளது. நாட்டில் சுற்றுலா மேம்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இந்தியா குரல் கொடுத்து வருகிறது.