பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த 18 மணி நேரமாக மீட்புப் பணிகள் நடந்து வரும் சூழலில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உயிரிழப்பு குறித்து லேடி ரீடிங் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “மசூதி தாக்குதலில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மீட்புப் பணி குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “இடிந்து விழுந்த மேற்கூரையின் கடைசிப் பகுதியை அகற்றப் போகிறோம். இதனால் மேலும் உடல்கள் மீட்கப்படலாம். மீட்கப்படுபவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்தனர்.
பெஷாவர் தலைமை போலீஸ் அதிகாரி முகமது கான் கூறும்போது, “சுமார் 300 முதல் 400 பேர் வரை மசூதியில் வழிபாட்டுக்காகக் கூடி இருந்தனர். உயிரிழந்தவர்களில் 90% பேர் போலீஸார்” என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்த போலீஸாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.
பொறுப்பேற்பு: ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பெஷாவர் நகரில் தீவிரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு ‘தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பினர் கடந்த காலங்களில் இதுபோன்ற கொடூர தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், தற்போதைய தாக்குதலுக்கும் தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்தினரே பொறுப்பேற்றுள்ளனர்.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) எனப்படும் இந்த அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சியில் உள்ள தலிபான்களுடன் நெருக்கமாக உள்ளனர். பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்களை இன்னும் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்த அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக போரிட்டு வருகிறது. பாகிஸ்தான் அரசுடன் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்த அமைப்பு கடந்த நவம்பரில் முறித்துக் கொண்டது. இதன் பிறகு, பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து,அரசு திவாலாகும் நிலையில் இருப்பதால் சர்வதேச செலாவணி நிதியத்தின் உடனடி உதவியையும் நாடியுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரான பெஷாவரில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.