அரசாங்கங்களின் வரி வருவாயை குறி வைக்கும் ஷெல் நிறுவனங்கள்! – விளக்கும் ஷார்ஜா அதிகாரி| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

சமீபத்தில் வெளியாகி வணிக உலகை அதிர வைத்து இருக்கும் ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அதானி குழும சர்ச்சைகள் பற்றிய அறிக்கையில் நிறைய இடங்களில் ஷெல் (Shell) நிறுவனங்களை பற்றிய குறிப்புக்கள் இருந்ததை நாம் பார்த்தோம் அல்லவா? இந்த ஷெல் நிறுவனங்கள் என்றால் என்ன அவற்றின் நோக்கம் என்ன அவை எப்படி செயல்படுகின்றன, அவற்றால் உலக பொருளாதாரத்துக்கு என்ன பாதிப்பு என்பது பற்றிய விவரங்களை இங்கு காண்போம் .

உலக நாடுகளில் மிக பெரும் நிறுவனங்களை நடத்தும் செல்வந்தர்கள் அரசாங்கத்துக்கு முறையாக கட்ட வேண்டிய வரியை காட்டாமல் ஏமாற்றி மடைமாற்ற அவர்களுக்கு கிடைத்து இருக்கும் ஒரு சட்டபூர்வமான வசதிதான் இந்த shell நிறுவனங்கள்.

Representational Image

அமெரிக்காவின் டெலாவேர், நெவேடா, வயோமிங் மாநிலங்கள், இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளான விர்ஜின் தீவுகள், கேமன் தீவுகள், பெர்முடா, ஜெர்சி போன்ற தீவுகள், லக்ஸம்பேர்க், நெதர்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெரும்பான்மையான ஷெல் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஷெல் கம்பெனிகள் வெறும் லெட்டர் பெட் கம்பெனிகள் மட்டுமே. அவைகளுக்கு கட்டிடங்களோ, வேலையாட்களோ இருக்க மாட்டார்கள். ஆனால் சட்டவிரோதமான பண பரிவர்த்தனைக்கான வங்கி கணக்குகள் மட்டுமே இருக்கும். நம்ம ஊரில் அரசியல் கட்சிகள் அடிக்கடி குறிப்பிடும் ஸ்விஸ் வங்கி கணக்குகள் என்பவை இத்தகைய ஷெல் நிறுவனங்களுடைய வங்கி கணக்குகளே.

இந்த ஷெல் நிறுவனங்கள் தொழில் அதிபர்களுக்கு வழங்கும் வசதிகள் என்ன ?

1) மிக குறைந்த அளவிலான கார்பொரேட் வரி அல்லது முழுமையான கார்பொரேட் வரி விலக்கு

2) ஷெல் நிறுவனத்தின் உண்மையான முதலாளிகளை பற்றிய தகவல்கள் பரம ரகசியமாக பாதுகாக்கப்படும் . இன்டர்போல் வந்து விசாரித்தால் கூட விவரம் வெளியில் கசியாது

3) நம்ம ஊர் ரிசர்வ் வங்கி போன்று எந்த ஒரு வங்கி கட்டுப்பாடுகளும் இந்த ஷெல் நிறுவனங்களுக்கு கிடையாது

Representational Image

எப்படி இந்த ஷெல் நிறுவனங்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து பணம் கடத்தப்படுகிறது ?

1) ஏற்றுமதிக்கான மதிப்பை கூட்டியும் , இறக்குமதிக்கான மதிப்பை அதிகரித்தும் வரி ஏய்ப்பு செய்து மிக பெரும் அளவிலான பணம் சம்பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து குறைந்த மதிப்புக்கு ஷெல் கம்பெனி ஒன்றுக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்யபட்டு பின் அந்த ஷெல் கம்பெனியில் இருந்து மிக அதிக மதிப்புக்கு அதே பொருள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சுங்க தீர்வை ஷெல் கம்பெனிக்கு கடத்தப்படுகிறது.. இதே போல் உலக நாடுகளில் இருந்து ஷெல் கம்பெனி ஒன்றுக்கு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அங்கிருந்து மிக அதிக விலைக்கு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.இதிலும் இந்திய அரசு நிறைய பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது.

2) ஷெல் நிறுவனங்களில் இருந்து அவற்றின் இந்திய முதலாளிகள் வைத்து இருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது போல பாவ்லா செய்து ஷெல் நிறுவனங்களுக்கு கடத்தப்பட்ட அவர்களின் கருப்பு பணம் மீண்டும் இந்தியாவுக்குள் அதிகாரபூர்வமாக நுழைகிறது.இந்த ஏற்பாட்டால் இந்திய முதலாளிகள் வாங்கிய கடனுக்கு வட்டி காட்டுகிறோம் என்று சொல்லி தங்கள் வருடாந்திர வரவு செலவு கணக்கில் Tax Return Filing) லாபத்தை குறைத்து காட்டி பெரிய அளவிலான வரி ஏய்ப்பை செய்கிறார்கள்.

Representational Image

3) ஷெல் நிறுவனங்களில் இருந்து அவற்றின் இந்திய முதலாளிகள் வைத்து இருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு பலதரப்பட்ட சேவைகள் வழங்குகிறோம் என்று பம்மாத்து செய்து சேவைகளுக்கான கட்டணம் என்ற பெயரில் பெருமளவிலான கருப்பு பணம் இந்தியாவில் இருந்து இந்த ஷெல் நிறுவனங்களுக்கு அதிகாரபூர்வமாக கடத்தப்படுகிறது .

4) கூகிள் ஆரக்கிள் போன்ற சாப்ட்வெர் நிறுவனங்கள் தங்கள் நிறுவன சாப்டவேர்களின் காப்புரிமையை (License) வரியே இல்லாத ஷெல் நிறுவனங்களை ஆரம்பித்து அவற்றின் மூலம் உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்து மிக பெரும் வரி ஏய்ப்பு செய்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். கூகிள் நிறுவனம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய இங்கிலாந்து அருகே உள்ள தீவு ஒன்றில் ஒரு ஷெல் நிறுவனத்தை வைத்து உள்ளது.

5) ஷெல் நிறுவனங்களின் பெயரில் போலியான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு ஆப்ரிக்கா போன்ற வறுமையான நாடுகளில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்பட்டு மிகப்பெரும் வரி ஏய்ப்பு நடக்கிறது , கடந்த 30 வருடங்களில் கிட்டத்தட்ட 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வரி ஏய்ப்பு ஆப்பிரிக்காவில் சுரங்க தொழில் ஈடுப்பட்டுள்ள ஷெல் நிறுவனங்களால் நடத்தப்பட்டு இருக்கிறது. இப்படி அரசுக்கு சேர வேண்டிய முறையான வரி கிடைக்காததால்தான் நிறைய கனிம வளங்கள் இருந்தும் ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதாரம் , கல்வி போன்ற வசதிகள் முழுமையாக கிடைக்கவில்லை.

இந்த ஷெல் நிறுவனங்களால் வருடத்திற்கு 600 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான அரசுக்கு சேர வேண்டிய வரி பதுக்கப்படுகிறது, இதனால் உலகளாவிய நாடுகளின் அரசாங்கங்கள் மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

Representational Image

இந்த ஷெல் நிறுவனங்களை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் உங்கள் பார்வைக்கு

1) உலக நாடுகளின் வரி வருவாயை சட்டவிரோதமாக உறிஞ்சி குடிக்கும் 1.5 மில்லியன் ஷெல் (டம்மி) நிறுவனங்களை கொண்ட அமெரிக்க மாநிலம் டெலாவேர். இங்கு 1209 North Orange Street என்ற ஒரு முகவரியில் மட்டும் 285,000 ஷெல் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இது ஒரு இரண்டடுக்கு மாடியை கொண்ட ஒரு சிறிய கட்டிடம் அவ்வளவே

2) வெறும் 30000 மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட விர்ஜின் தீவுகளில் மட்டுமே சுமார் 400,000 ஷெல் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதுவும் பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கிய மொஜாக் பொன்சேகா (Mossack Fonseca) சட்ட நிபுணர்களின் நிறுவனம் மட்டுமே 100,000 ஷெல் நிறுவனங்களை இந்த விர்ஜின் தீவுகளில் உருவாக்கி கையாண்டு வருகிறது.

Representational Image

இப்படிப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்கள், சார்ட்டர் அக்கவுண்டண்டுகள், வணிக மேலாண்மை படித்த நிபுணர்கள் இவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் ஒரு கூட்டு களவாணித்தனம்தான் அரசாங்கங்களின் வரி வருவாயை உறிஞ்சி குடிக்கும் இந்த ஷெல் நிறுவனங்கள்.

உலகளாவிய அரசாங்கங்கள் இந்த ஷெல் நிறுவனங்களை கட்டுப்படுத்த எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் மிக பெரும் தொழிலதிபர்கள் தங்களுக்கு இருக்கும் வலுவான அரசியல் செல்வாக்கால் தங்கள் கருப்பு பணத்தை பதுக்க உதவும் இந்த ஷெல் நிறுவனங்களை இன்று வரை காப்பாற்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இந்தியாவிலும் பதவிக்கு வரும் ஒவ்வொரு புதிய அரசும் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இப்படிபட்ட டுபாக்கூர் ஷெல் நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பதுக்கப்பட்டு இருக்கும் பல லட்சம் கோடி பணத்தை மீட்டெடுத்து இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று உறுதிமொழியை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

நாமும் அப்படிப்பட்ட வாக்குறுதிகளை நம்பி நம்முடைய வாக்குகளை செலுத்திக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் இதுவரை உருப்படியாக எதுவும் நடந்த பாடில்லை . ஹிண்டன்பெர்க் அறிக்கையின் தாக்கத்துக்கு பிறகாவது ஏதாவது மாற்றங்கள் இதில் ஏற்படும் என்று நம்புவோம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.