budget 2023 expectations: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2023-ஐ தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், சாமானிய மக்கள் தங்களின் எதிர்பார்க்களை பட்டியலிட்டுள்ளனர். அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு – சோப்பு முதல் எண்ணெய் உள்ளிட்ட காய்கறி சாமான்கள் வரை நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விலைகளை குறைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் நல்ல அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது சாத்தியமா? என மக்களிடம் கேட்டபோது ஜிஎஸ்டி வரிவிதிப்பில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறிப்பிடத்தகுந்த ஜிஎஸ்டி வரி விலக்கை கொடுத்தால் சாத்தியமாகும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், மத்திய பட்ஜெட்டில் சோப்பு, சோப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புக்கு தீர்வு காண வேண்டும் என்று 73% சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கருதுவது தெரியவந்துள்ளது. 54% பேர் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விலக்கை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். கணக்கெடுக்கப்பட்டவர்களில், 44% பேர் ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 32% பேர் வீட்டுக் கடன் விலக்கு வரம்புகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அன்றாட குடும்ப வாழ்கையில் எண்ணெய் விலை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ள மக்கள், அது கணிசமான அளவில் பொருளாதாரத்தையும் பாதிப்பதாகவும் கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் வருமான வரி விலக்கையும் மக்கள் எதிர்பார்ப்பது கருத்து கணிப்பு மூலம் தெரியவந்திருக்கிறது.
அண்மையில் எடுக்கப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், குடும்பங்களுக்கான செலவுகள் 59% வரை அதிகரித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதில் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் வீட்டுப் பொருட்களுக்கான செலவுகளே அதிகம். பொருளாதார சிக்கல் காரணமாக வீட்டில் இருக்கும் கார், ஏசி உள்ளிட்டவைகளுக்கான செலவுகளை மக்கள் குறைத்திருப்பதும் தெரியவந்திருப்பதாக கருத்து கணிப்பு நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான தீர்வுகள் எல்லாம் பட்ஜெட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.