தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் மெக்குவாய் கிராம மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வராணி என்பவர், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 29-ம் தேதி மாலை செல்வராணி, அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ரமணா என்ற ஆசியையுடன் இரண்டு சக்கர வாகனத்தில் புதியம்புத்தூருக்குச் சென்றுள்ளார். அப்போது, செல்வராணி தனது கையில் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டுள்ளார்.
அந்தப் பையில் கம்மல், நெக்லஸ் என சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வைத்திருந்துள்ளார். தனது கைப்பை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த செல்வராணி, ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் இந்திராந கரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி முத்துச்செல்வி, வீட்டிற்கு வரும் வழியில் கீழே கிடந்த கைப்பை ஒன்றை எடுத்து பார்த்துள்ளார். அதில் தங்க நகைகள் இருந்துள்ளன.
வீட்டிற்கு வந்த முத்துச்செல்வி, தன் கணவர் மற்றும் மகளிடம் கீழே கிடந்த கைப்பையை காட்டி, அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். முத்துச்செல்வியின் மகள் மதிஷாவும் அதே பள்ளியில்தான் படித்து வருகிறார். செல்வராணி கைப்பையை தொலைத்த விஷயம் ஏற்கெனவே பள்ளி முழுவதும் பரவியதால், தனது தலைமை ஆசிரியையும் நகையுடன் இருந்த கைப்பையைத் தவறவிட்டது குறித்து சொல்லியுள்ளார். இதனையடுத்து மதிஷா, தலைமை ஆசிரியை செல்வராணிக்கு தகவல் கூறியது மட்டுமன்றி, நகைகளுடன் இருந்த கைப்பையை ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், நகைகளின் அடையாளத்தைக் கூறியதால் அது தலைமை ஆசிரியை செல்வராணி தவறவிட்ட கைப்பைதான் என்பது தெரிய வந்தது. கைப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முத்துலெட்சுமி மற்றும் அவரின் மகள் மதிஷா ஆகியோரை அழைத்து போலீஸார் சால்வை அணிவித்துப் பாராட்டியதுடன் காவல்துறை சார்பில் ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கினர்.
இதுகுறித்து முத்துலெட்சுமியிடம் பேசினோம், “கடையில மளிகை சாமான் வாங்கிட்டு ஓட்டப்பிடாரம் ரோட்டு வழியா வீட்டுக்கு நடந்து வந்துக்கிட்டிருந்தேன். அப்போ, கத்தரிப்பூ கலர்ல ஒரு கைப்பை கிடந்துச்சு. அதை எடுத்து திறந்து பார்த்தேன். ஊதா, சிவப்பு, பச்சை நிற பேனாக்கள், கொஞ்சம் சில்லறைக் காசு இருந்துச்சு. இன்னொரு பக்கத்துல பூப்போட்ட ஒரு சோடி கம்மலும், ஒரு நெக்லஸும் இருந்துச்சு. யாரோ தவற விட்டுட்டாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். வீட்ல வந்து கணவர்ட்ட சொன்னேன். `கைப்பையை போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சிடுவோம். கைப்பையை தவற விட்டவங்க போலீஸ்ல புகார் கொடுத்திருந்தா அவங்களே உரியவங்கக்கிட்ட ஒப்படைச்சிடுவாங்க’னு சொன்னார்.
நானும் கணவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பிக்கிட்டு இருந்தப்போ, என்னோட மகள் மதிஷா வீட்டுக்கு வந்தா. அவகிட்டயும் விஷயத்தைச் சொல்லி அந்த கைப்பையைக் காண்பிச்சேன். `எம்மா.. எங்க ஸ்கூல் ஹெச்.எம் மேடம் தங்க நகையோட ஒரு ஹேண்ட்பேக்கை தொலைச்சிட்டாங்கன்னு சொன்னாங்க. பைக்குள்ள ரெட், கிரீன் இங்க் பேனா இருக்கிறதைப் பார்த்தா ஒருவேளை அந்த மேடம் பைதான்னு நினைக்கேன்’னு சொன்னா.
பக்கத்து தெருவுல உள்ள இன்னொரு டீச்சரம்மாகிட்ட ஹெச்.எம் மேடம் போன் நம்பர் வாங்கி விஷயத்தைச் சொன்னோம். அதே நேரத்துல போலீஸ் ஸ்டேஷன்லயும் பையை ஒப்படைச்சிட்டு வந்தோம். அடையாளம் சொல்லி கைப்பையை வாங்குறதுக்காக அந்த மேடம் ஸ்டேஷனுக்கு வந்தாங்க. இன்ஸ்பெக்டர் சார் என்னையும் மகளையும் வரச் சொன்னாங்க. எங்களைப் பார்த்ததும் சந்தோஷத்துல கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னாங்க. என் மகளுக்கும் வாழ்த்து சொன்னாங்க.
ஸ்டேஷன்ல உள்ள போலீஸ்காரங்களும் எங்களுக்கு சால்வை அணிவிச்சு மரியாதை செஞ்சாங்க” என்றார்.
முத்துலெட்சுமியின் மகள் மதிஷா, “ஹெச்.எம் மேடம் கைப்பை தொலைஞ்சு போனதுல இருந்து ரொம்ப கவலையாவே இருந்தாங்க. இப்போ ஹேப்பி ஆயிட்டாங்க. ஸ்கூல்ல மற்ற டீச்சர்கள்கிட்டயும் என்னைப் பத்தியும், எங்க அம்மாவைப் பத்தியும் பெருமையாப் பேசுனாங்க” என்றார்.
நேர்மையுடன் செயல்பட்ட தாய், மகளை ஊர் மக்களும் பாராட்டி வருகிறார்கள்.