மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நாளை முதல் மாமல்லபுரம் வருகை தருகின்றனர். இவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களான ஐந்து ரதம், அர்ஜுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக, மாமல்லபுரம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல், ரிசார்ட்களின் உரிமையாளர்கள், மேலாளர்களை அழைத்து இன்றும் நாளையும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதன்படி, ஓட்டல்களில் வந்து தங்குபவர்களின் விவரங்களை ஆதார் கார்டு மற்றும் புகைப்படத்துடன் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தாலோ யாராவது நீண்டநேரமாக அறைக்குள் இருந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். ஜி 20 பிரதிநிதிகள் வரும்போது அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் கேட்டுக்கொண்டார். அப்போது, ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோர் ‘’முழு ஒத்துழைப்பு அளிப்போம்’’ என்று உறுதி அளித்தனர்.
மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஓட்டல், ரிசார்ட்களின் உரிமையாளர்கள் மேலாளர்கள் கலந்து கொண்டனர். மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்கள் குறித்து விளக்கிக் கூற 10 சுற்றுலா வழிகாட்டிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் தங்களை அறிமுகம் படுத்திகொண்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை எப்படி விளக்கிக் கூற வேண்டும் என்பது குறித்து சுற்றுலா வழிகாட்டிகளுக்கு, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சிற்பக்கலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.