ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்காக திமுக மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வார்டு வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை அந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் அவர்களில், எடப்பாடி பழனிசாமி அணி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைத்து, இடைத்தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை. இரட்டை இலை கேட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதால், அந்த வழக்கின் தீர்ப்புக்காக எடப்பாடி பழனிசாமி அணி காத்திருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வமும் அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள இருக்கிறார். தனது அணி போட்டியிடவில்லை என்றாலும் பாஜகவுக்கு முழு ஆதரவையும் கொடுக்க தயாராக இருப்பதாக அவர் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அதேபோல் அந்த கூட்டணியில் இருக்கும் பாஜக, இதுவரை தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றார். கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் அந்த தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்த அவர், இது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் என கூறியுள்ளார்.