கர்நாடகத்தில் மூன்று மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், நாள்தோறும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத வகையில் அரசியல் களம் மாறியிருக்கிறது. இந்த நிலையில், மாநிலத்தில் பா.ஜ.க-வின் ‘ஐகான்’ ஆக இருக்கும் எடியூரப்பா, ‘இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என அறிவித்திருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது. எடியூரப்பாவின் இந்த முடிவுக்கான காரணம் என்ன, அவரின் இந்த முடிவினால் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்படுமா… என்பது குறித்து பார்ப்போம்.
நான்கு முறை முதல்வர்!
கர்நாடக மாநிலம், சிமோகோ மாவட்டத்தைச் சேர்ந்த எடியூரப்பா, ஜனதா கட்சியில் தன் அரசியல் வாழ்வை துவங்கி அதிலிருந்து வெளியேறி, 1980-ல் பா.ஜ.க-வில் இணைந்தார். தாலுகா செயலாளர், சிவமோகா மாவட்டத் தலைவர் என கொஞ்சம், கொஞ்சமாக அந்தக் கட்சியில் வளர்ந்தார். பின்னர், பா.ஜ.க தலைமையில், நான்கு முறை முதல்வர், மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்திருக்கிறார். கர்நாடகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து, இன்று, பா.ஜ.க-வின் முக்கிய ‘ஐகான்’ ஆக, அரசியல் களத்தில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். குறிப்பாக கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில், 18 சதவிகிதம் வரையிலுள்ள, அரசியலை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றான லிங்காயத் சமூகத்தை (வீரஷைவ லிங்காயத் பிரிவை) சேர்ந்தவர் இவர்.
பொறுப்பேற்பும் – அதிருப்தியும்…
2019-ல் காங்கிரஸ் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி ஆட்சி நடந்தபோது, எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகியதால் ஆட்சி கவிழ்ந்தது. எடியூரப்பா நான்காவது முறையாக முதல்வராகி அவர் தலைமையில், கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியை அமைத்தது. இந்த நிலையில், ‘‘எடியூரப்பா தன் மகன் விஜயேந்திராவை துணை முதல்வராக்கப் பார்க்கிறார், குடும்ப அரசியல் செய்கிறார், வயதானதால் அரசியலில் அவரால் சரிவர இயங்க முடியவில்லை, ஊழல் வேறு..” எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களே அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனால், பா.ஜ.க மேலிட உத்தரவுப்படி தனது முதல்வர் பதவியை, அப்போது அமைச்சரவையிலிருந்த பசவராஜ் பொம்மைக்கு விட்டுக்கொடுத்தார்.
இதனால், கடும் அதிருப்தி அடைந்ததுடன், அன்று முதல் கர்நாடக பா.ஜ.க-வில் எடியூரப்பாவுக்கும், முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் ‘கோல்டு வார்’ துவங்கியது. பல்வேறு சம்பவங்களுக்கு இருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதிருப்தியின் காரணத்தால் கடந்த ஜூலை மாதமே, ‘‘இனி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன், எனக்கு பதிலாக எனது சிகாரிபுரா தொகுதியில் என் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார்’’ என்றார் எடியூரப்பா. இவரது அதிருப்தியை போக்க, பா.ஜ.க மேலிடம் எடியூரப்பாவை அழைத்து சமாதானமும் பேசியது.
அதிருப்தியின் வெளிப்பாடு?
தேர்தல் நெருங்கும் நிலையில் மாநிலம் முழுவதிலும் கர்நாடக பா.ஜ.க-வினர் பிரசாரத்தை துவங்கியிருக்கின்றனர். சமீபத்தில் ஹப்ளி மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வந்த நிகழ்ச்சிக்கு, பசவராஜ் பொம்மை அழைப்பு விடுக்காததால், அவர் மீது கடும் அதிருப்தியடைந்தார் எடியூரப்பா. மேலும், சில மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், தன்னுடைய ஆதரவாளர்களிடம், ‘பசவராஜ் பொம்மை என்னை ஓரங்கட்டுகிறார், கட்சியில் எனக்கு செல்வாக்கு இல்லை’ என புலம்பியும் வந்திருக்கிறார் என்கிறார்கள்.
இப்படியான சூழலில், சிவமோகா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, ‘‘எனக்கு தற்போது 80 வயதாகிறது. இனி என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், இதற்காக நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று, பா.ஜ.க ஆட்சியமைக்க என்னால் இயன்றதைச் செய்வேன்’’ எனக் கூறினார்.
பா.ஜ.க-வுக்கு பின்னடைவு?
இது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். ‘‘முதல்வர் பதவி பறிபோனதிலிருந்தே, எடியூரப்பா பெரும்பாலான கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், கட்சிப் பணிகளில் விலகியே இருந்து வந்தார். அரசியலை தீர்மானிக்கும், அவரது சமூகமான லிங்காயத் மடாதிபதிகள் மட்டுமின்றி, ஒக்கலிகா சமூக தலைவர்களுடன், எடியூரப்பா நெருங்கிய தொடர்பு கொண்டவர். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், மடாதிபதிகளே அதிருப்தியடைந்தனர். வரும் தேர்தலுக்கு எடியூரப்பாவின் ஆதரவு தேவை என்று கணக்குப்போட்ட மோடியும், ஜே.பி.நட்டாவும், பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் இருக்கும், Parliamentary board committee-ன் உறுப்பினராக எடியூரப்பாவை கடந்த ஆகஸ்டு மாதம் தேர்வு செய்தனர்.
ஆனாலும், கர்நாடக பா.ஜ.க-வின் முகமாக தன்மை முன்னிறுத்த நினைத்த முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவை பல நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் விட்டதால், எடியூரப்பா கடும் அதிருப்தியில், ‘தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என அறிவித்திருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒருவேளை இனி அவர், தேர்தலுக்கு சரிவர களப்பணியில் ஈடுபடாமல் விலகியிருந்தால், அது பா.ஜ.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாக எடியூரப்பா கோலோச்சும் தென் கர்நாடகத்திலும், லிங்காயத் வாக்கு வங்கியிலும் எதிரொலிக்கும். இருந்தாலும் பா.ஜ.க-விலுள்ள தன்னுடைய மகன் விஜயேந்திரா, எம்.பி-யாகவுள்ள ராகவேந்திரா ஆகியோரின் நலனுக்காகவாது, கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றனர் விரிவாக.
‘எடியூரப்பாவின் முடிவும், அவரின் அதிருப்தியும் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறதோ?,’ என்ற கேள்விகளும், அரசியல் களத்தில் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.