தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப்
பட வேண்டும் என்று,
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி
உள்ளார்.
இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான
அன்புமணி
ராமதாஸ், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி செய்யப்படும் மேல்முறையீடுகள் பல ஆண்டுகளாக விசாரிக்கப்படவில்லை.
அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான மிக முக்கிய கருவி தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகும். அந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான அமைப்பு செயல்படாமல் இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் அந்த சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே வீணாகி விட்டது.
இந்தியாவிலேயே மிகவும் மோசமாக செயல்படும் தகவல் ஆணையம் தமிழ்நாடு தகவல் ஆணையம் தான். இந்த ஆணையத்தில் செய்யப்படும் இரண்டாம் நிலை மேல்முறையீடுகளில் வெறும் 14 சதவீதம் மட்டுமே விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ளவை கிடப்பில் போடப்படுகின்றன.
தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும். அதற்காக ஜனநாயகத்திலும், வெளிப்படைத்தன்மையிலும் நம்பிக்கை கொண்டவர்களை தலைமைத் தகவல் ஆணையராகவும், தகவல் ஆணையர்களாகவும் உடனடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு ஒரு தலைமை ஆணையர், 9 ஆணையர்கள் என 10 பேரை நியமிக்க முடியும். ஆனால், இப்போது மொத்தம் 7 பேர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இது போதுமானதல்ல என்பதால், ஆணையர்களின் எண்ணிக்கையை பத்தாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு
அன்புமணி
ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.