கரூர்: அமைச்சரை அவதூறாக பேசிய அதிமுக கவுன்சிலர் கரூர் மாநகராட்சி மாமாமன்ற கூட்டத்தில் இருந்து பாதுகாவலர் மூலம் வெளியேற்றப்பட்டார். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் மற்றொரு அதிமுக கவுன்சிலர் பங்கேற்றார்.
கரூர் மாநகராட்சி அவசரக்கூட்டம் மேயர் கவிதா தலைமையில் கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் இன்று (ஜன. 31 தேதி) நடைபெற்றது. ஆணையர் ந.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் 1வது வார்டு உறுப்பினர் சரவணன் (திமுக) மாநகராட்சி பகுதியில் சாலைகள் மிகமோசமாக இருக்கிறது என்றவர், இதற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பற்றி அவதூறாக குறிப்பிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
அதிமுக மாமன்ற உறுப்பினர் சுரேஷ்: சாலைகள் போடாமலே சாலைகள் போடப்பட்டதாக ஆதாரங்களுடன் நிரூபித்தோம். நீங்களும் அவ்வாறு ஆதரத்தோடு புகார் கூறுங்கள் என்றார்.
மண்டலக்குழு தலைவர் எஸ்.பி.கனகராஜ்: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகதான் ஆட்சி பொறுப்பில் இருந்தது. அவர்கள் ஆட்சியில் எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை என்றார்.
அதிமுக மாமன்ற உறுப்பினர் சுரேஷ்: அதிமுக ஆட்சியில் இருந்த போது தற்போது திமுகவில் இருக்கும் எனக்கூறி மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பற்றி அவதூறாக குறிப்பிட்டு 4 ஆண்டு காலத்திற்கு அதிகமாக அமைச்சராக இருந்தார். அவரும் அப்போது ஒன்றும் செய்யவில்லை என்றார்.
அமைச்சரை அதிமுக கவுன்சிலர் அவதூறாக பேசியதால், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாவலர் மூலம் அதிமுக மாமன்ற உறுப்பினர் சுரேஷ் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவினர் மற்றொரு உறுப்பினரான தினேஷ் பங்கேற்றார். தொடர்ந்து கூட்டத்தில் பல தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.