பெரம்பலூர் அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை கழுத்தை அறுத்து கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தொண்டப்பாடியைச் சேர்ந்த மாணிக்கம் – மாக்காயி தம்பதியின் 4 மகள்கள் திருமணமாகி, அதே ஊரில் வசித்து வரும் நிலையில், தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்றிரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பின்வாசல் வழியாக வீடு புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது, மூதாட்டி தற்காத்துக் கொள்ள, கொள்ளையர்களுடன் போராடியபோது செயின் அறுந்ததில், முக்கால் பகுதி செயினை பறித்த கொள்ளையர்கள், மூதாட்டியையும் அவரது கணவரையும் கொலை செய்துவிட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
காலையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.