பாமக
தலைவர் அன்புமணி, ‘‘என்.எல்.சி நிறுவனம், அதன் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பதையும் வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பாமக மற்றும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்தி வருவதையும் முதலமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள்.
என்.எல்சி. சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக் கூடியவை. அதனால், அந்த நிலங்களை விட்டுத்தர உழவர்கள் விரும்பவில்லை. நிலங்களை அளப்பதற்காக சென்ற என்.எல்.சி. மற்றும் கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரிகளை மக்கள் விரட்டி அடித்ததில் இருந்தே அவர்களின் உணர்வுகளை அறியலாம்.
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் என்.எல்.சி.க்கு பொதுமக்கள் தாங்களாக முன்வந்து நிலம் வழங்கியதாகவும், அவ்வாறு நிலம் வழங்கியவர்களில் 10 பேருக்கு
என்.எல்.சி.பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலம் கையகப்படுத்துவதை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், தங்களுக்குச் சாதனமாக செயல்படும் சிலரை வைத்துக்கொண்டு இதுபோன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது நியாயமற்றது. உழவர்களின் நலனுக்காக பாடுபடுவதாக உறுதியேற்றுக் கொண்ட வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில்
ஈடுபடாமல் விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் நிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் (National Monetisation pipeline) திட்டத்தின் கீழ் என்.எல்.சி. நிறுவனம் அடுத்த இரு ஆண்டுகளில் தனியாருக்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் என்.எல்.சி. நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்று தெரிந்தே, அந்த நிறுவனத்திற்கு உழவர்களின் நிலங்களை பறித்துத் தருவது நியாயமல்ல.
தமிழ்நாட்டில் 2040 – ஆம் ஆண்டுக்குள் நிகரச் சுழிய கரிம உமிழ்வு (Net Zero Carbon Emissions) நிலை ஏற்படுத்தப்படும் என்று தாங்களே அறிவித்திருக்கிறீர்கள். இதற்கான நிலக்கரி சுரங்கங்களை மூடுதல் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்நிலையங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு முரணாக புதிய நிலக்கரி சுரங்கங்கள் அனல்மின் நிலையங்களை அமைப்பது எந்த வகையில் சரியாகும்? இரண்டாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 1985- ஆம் ஆண்டில கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் நிலங்கள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படவில்லை.
அந்த நிலங்கள் இருந்தும் இன்னும் 40 ஆண்டுகளுக்கு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க முடியும். இத்தகைய சூழலில் என்.எல்.சி.க்கு அவசரம் அவசரமாக நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டிய தேவை
எங்கிருந்து எழுகிறது? வேளாண் வளர்ச்சி உழவர் நலம் ஆகியவற்றுக்காக ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய வேளாண்துறை அமைச்சர் அந்த பணிகளை கைவிட்டு என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்தி தரும் முகவரைப் போல செயல்பட வேண்டிய தேவை என்ன? என்பதே மக்களின் வினா.
எனவே கடலூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை தாங்கள் நிறைவேற்ற வேண்டும். என்.எல்.சி. நிறுவனத்திடமிருந்து விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என பாமக தலைவர் அன்புமணி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
இந்தநிலையில் நீர், நிலம், விவசாயம் காப்போம் என்ற பெயரில் மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் இன்று மாலை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்கம், என்.எல்.சி மூன்றாவது சுரங்கம், வீராணம் நிலக்கரி திட்டம், பெரியப்பட்டு சைமா சாயக்கழிவு ஆலை உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தை பாழாக்கும் திட்டங்களை முறியடிப்போம் என அன்புமணி விளக்கப் பொது உரை வழங்கினார்.
அப்போது அவர் கூறியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘அன்புமணின்னா டீசண்ட் பாலிடிக்ஸ்னு நினைச்சுகிட்டு இருக்கான். நான் வேட்டியை மடிச்சு கட்டுனா தெரியும் நான் யார்னு’’ என அவர் பேசியது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.