டொரான்டோ, கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஹிந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டது, அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் பிராம்ப்டன் நகரில் கவுரி சங்கர் கோவில் அமைந்துள்ளது. இந்திய பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழும் இக்கோவில் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதி உள்ளனர்.
இது, அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூலை முதல், இதுபோல மூன்று சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘கோவிலை சேதப்படுத்தியது வன்முறைச் செயல். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது, இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது.
‘இது குறித்து எங்களது கவலையை கனடா அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம்’ என டொரான்டோவில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவிலும், சமீபத்தில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூன்று ஹிந்து கோவில்களை சேதப்படுத்தியதுடன், சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement