தூத்துக்குடி: கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கோர்ட் விடுதலை செய்துள்ளது. ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவரை கடந்த 2011 மார்ச் 1ல் ஆறுமுகநேரி பஜாரில் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆறுமுகநேரி போலீசார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டன், ஆல்நாத் ஆகியோர் முன்பே இறந்து விட்டனர். மேலும் பாலா (எ) பாலகிருஷ்ணன், கோபி, குமார் என்ற உதயகுமார், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இதுதவிர 21.05.2011 இரவு சுரேசின் கட்சி அலுவலகம் மற்றும் பாரில் வெடிகுண்டு வீசியதாகவும், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் மீது ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணையும் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை நீதிபதி குருமூர்த்தி விசாரித்து, 3 வழக்குகளிலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.