திருவனந்தபுரம், கேரளாவில், உணவு தயாரித்து, விற்பனை செய்யும், ஹோட்டல்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தொற்று நோய் மற்றும் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்ற மருத்துவ சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு உணவு கலப்படம் மற்றும் தரமற்ற உணவு உட்கொண்டதினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த நர்ஸ், மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகத்தில் கலப்பட உணவு சாப்பிட்டு கடந்த மாதம் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்கு பின், உணவகங்கள், உணவு தயாரித்து வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.
இதன்படி, உணவகங்கள், உணவு சமைக்கும் நிறுவனங்கள், விசேஷங்களுக்கு சமையல் செய்து தரும் நிறுவனங்கள் உட்பட உணவு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ள ஊழியர்கள் அனைவரும், தொற்று நோய் மற்றும் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்ற மருத்துவ சான்றை கட்டாயம் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement